மேல்சபை துணைத்தலைவர் தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு: காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி:

பாராளுமன்ற மேல்சபை துணைத் தலைவர் தேர்தலில் மம்தா கட்சி வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி   அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாராளுமன்ற மேல்சபை துணைத் தலைவராக தற்போது இருந்து வரும் குரியனின் பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்தில் முடிவடைவதையொட்டி, அந்த இடத்தை கைப்பற்ற  பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது மேல்சபை துணைத்தலைவராக இருந்து வரும் பி.ஜே.குரியன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த பதவியை வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம்   அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து, புதிய மேல்சபை துணைத்தலைவர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது.

தற்போது  பாராளுமன்ற மேலவையில் 250 எம்.பி.க்கள் உள்ளனர்.  இவர்களில் 238 பேர் மாநில எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். 12 எம்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த எம்.பி.க்கள்தான் ஓட்டு போட்டுத்தான்  மேல்சபை துணைத் தலைவரை  தேர்ந்தெடுக்க வேண்டும். மேல்சபை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 122 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், பாரதியஜனதா கட்சிக்கு மேல்சபையில்  67 எம்.பி.க்கள் மட்டுமே  உள்ளனர்.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளதால், அவர்களாலும் நேரடி யாக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலக்கட்சிகளுடன் சேர்ந்து மேல்சபை துணைத்தலைவருக்கான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பாரதியஜனதா கட்சி சார்பில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவை மேல்சபை துணைத்தலைவர்  தேர்தலில் களமிறக்க  என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மாநில கட்சிகளுடனும் பாஜக பிரமுகர்கள் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேல்சபை துணைத்தலைவர் பதவியை பாஜ கைப்பற்றுவதை தடுக்க காங்கி ரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கூட்டணி கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் கட்சி  தற்போது,  மேல்சபை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.

மேல்சபை துணைத் தலைவர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ்  கட்சி சார்பில் மூத்த தலைவர் சுகேந்துசேகர்ராய் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே திரினாமுல் காங்கிரசுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் தங்களது ஆதரவை தர ஒப்புக் கொண்டுள்ள நிலையில், தற்போது காங்கிரசும் ஆதரவு அளித்துள்ளதால் மம்தா பானர்ஜி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.