டில்லி

ருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை அவரது குடும்பத்தினர் அளித்ததையொட்டி மாநிலங்களவை ஊழியர் நலத் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ,மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி மறைவையொட்டி அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.   அருண்ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி அந்த ஓய்வூதியத்தை மாநிலங்களவை ஊழியர் நல நிதிக்கு அளித்தார்   அருண் ஜெட்லி வெகுநாட்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால் அவருடன் பணியாற்றிய கடைநிலை ஊழியர் நலனுக்கு இதை பயன்படுத்த அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையொட்டி மாநிலங்களவை செயலகம் நலத் திட்டம் ஒன்றை அமைத்துள்ளது.  அருண் ஜெட்லி குருப் சி ஊழியர் நல திட்டம் என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த வருடத்திலிருந்து இத்திட்டம் தொடங்க உள்ளது.  தற்போதைய நிலவரப்படி சங்கீதா ஜெட்லிக்கு வருடத்துக்கு ரூ.3 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  அதை அப்படியே இந்த திட்டத்துக்கு மாற்ற ஏற்கனவே அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் மாநிலங்களவை ஊழியர்களின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை உயர்கல்வியான பொறியியல், மருத்துவம், சட்டம், உள்ளிட்டவைகளில் பயிலும் மூன்று குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதைத் தவிரக் கடைநிலை ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.