டெல்லி

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு  முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாநிலங்களில் நாளை நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சென்ற மாதம் மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான வேட்பாளர்கள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில், 18 இடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் நாடு முழுவதும் நள்ளிரவு முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார். இதன் காரணமாக மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆந்திரப் பிரதேஷ், குஜராத், மணிப்பூர், மத்திய பிரதேஷ், மேகாலயா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.