மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: கபில்தேவை களம் இறக்கும் பாஜக

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் நியமன எம்.பியாக கிரிக்கெட் வீரர் கபில் தேவை களமிறக்கி, எதிரணி கூட்டணியை சிதறைவைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே குரியனின் பதவிக்காலம்  முடிவடைய இருக்கிறது.  இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த பதவி காங்கிரஸ் வசம் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கேரளா காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று   ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க ஆளும் பாஜக திட்டமிட்டு வருகிறது.  அதே நேரம், இந்த தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறுவதன் மூலம் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ் வலிமையாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் அனைத்து மாநில கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 69 எம்.பிக்களும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸூக்கு 51 எம்.பிக்களும் இருக்கிறார்கள்.

கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவின் பலம் தற்போது 87 ஆக இருக்கிறது. ஆனாலும்  அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி எடுத்து வருகிறது.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் கட்சியின் நேரடி உறுப்பினர் அல்லாத அதேசமயம் ஆதரவாளர் ஒருவரை களம் இறக்கி எதிரணியில் பிளவை உண்டாக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கட்சி சார்பற்ற நபர்களை நிறுத்துவதன் மூலம் மூன்றாவது அணியைச சேர்ந்த சில கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என பாஜக   எண்ணுகிறது.

மேலும் மாநிலங்களவையில் தற்போது குடியரசு தலைவர் நியமிக்கும் எம்பிக்களில் நான்கு இடம் காலியாக உள்ளன. இந்த இடத்திற்கு கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகை மாதிரி தீட்சித், மராத்தி நாடக எழுத்தாளர் பாலாசாகேப் புரந்தர் உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக   பரிசீலித்து வருகிறது. பிரபலங்களை சந்திக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா அண்மையில்  கபில் தேவ், மாதிரி தீட்சி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அப்போது எம்.பி.க்கள் நியமனம் குறித்து பேசபேசியதாக தெரிகிறது. இவர்களை எம்.பியாக்கி தங்கள் அணிக்கு ஆதவராக வாக்களிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிரபலங்களுக்கு எம்.பி பதவி கொடுப்பதன் மூலம் அவர்களை 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

கார்ட்டூன் கேலரி