சி.பி.ஐ. அலுவலகத்திலேயே சி.பி.ஐ. ரெய்டு!

டில்லி
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா மீதான லஞ்சக் குற்றம் தொடர்பாக தங்கள் தலைமையகத்தை சிபிஐ அதிகாரிகள் சோதனை இட்டு வருகின்றனர்.

பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்த வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷ் சனா அளித்த வாக்குமூலத்தின் படி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிய வந்தது.

சதீஷ் சனா தனது வாக்குமூலத்தில், “இந்த வழக்கில் இருந்து விடுப்ட நான் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரமேஷ் உதவியை நாடினேன். அவர் சிபிஐ சிறப்பு இயக்குனருடன் பேசிய பிறகு இனி என்னை இந்த வழக்கில் சேர்க்க மாட்டார்கள் என உறுதி அளித்தார். அதன் பிறகு என்னை சிபிஐ எந்த ஒரு விசாரணைக்கும் அழைக்கவில்லை. எனவே நான் இந்த விசரணை இத்துடன் முடிவடைந்ததாக எண்ணினேன்” என தெரிவித்தார்.

தற்போது ராகேஷ் ஆஸ்தானா இதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இன்று சிபிஐ குழுவினர் அவர்கள் தலைமையகத்தில் உள்ள ராகேஷ் ஆஸ்தானாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து எவ்வித தகவலும் இது வரை தெரிவிக்கப்படவில்லை