‘’ ஹைய்யா.. எனக்கு கொரோனா..’’  கொண்டாட்டம் போட்ட இயக்குநர்..


உலகப்போருக்குப் பிறகு சர்வதேச நாடுகளின், பேசு பொருளாகி விட்ட கொரோனாவை, விளையாட்டுப் பொருளாக்கி வித்தை காட்டியுள்ளார், ஒரு இயக்குநர்.

அவர் பெயர், ராம்கோபால் வர்மா.

நேற்று அவர் தனது டிவிட்டரில்,’’ எனக்கு கொரோனா பாதித்துள்ளது. இப்போது தான் டாக்டர் போன் செய்து சொன்னார்’’ என்று பதிவிட்டிருந்தார்.

’பெரிய மனுஷன் ஆயிற்றே. செய்தி உண்மையாகத்தான் இருக்கும்’’ என்று நம்பி அவருக்காகத் திரை உலகத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் ‘உச்’ கொட்டினர்.
அடுத்த நிமிடத்தில் அவரிடம் இருந்து இன்னொரு டிவிட்.

‘’ சாரி; எனக்கு கொரோனா இல்லை. இன்று என்ன தினம்? ஏப்ரல் ஒன்று. உங்களை  முட்டாளாக்கினேன்’’ என்கிறது, அந்த பதிவு.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, உலகம் தளர்ந்த நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழலில்-  முட்டாள் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடி ஜனங்களைப் பதற வைத்த ராம்கோபால் வர்மா தனது முட்டாள் தனமான செயலுக்கு வருந்திய மாதிரி தெரியவில்லை.

‘’’ உலகமே ஒரு விதமான இறுக்கத்தில் இருக்கிறது. இந்த வேளையில் உங்களைப் புன்னகை பூக்க வைக்கவே இப்படிச் செய்தேன்’’ என்று வியாக்கியானம் வேறு அளித்துள்ளார், அந்த இயக்குநர்.

– ஏழுமலை வெங்கடேசன்