ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : அத்வானிக்கு தொலைபேசி அழைப்பு தானாம்

டில்லி

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இதுவரை அழைக்கப்படாத அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிரது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.  உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு ராம் ஜன்மபூமி தீர்த் ஷேத்திர டிரஸ்ட் என ஒரு அமைப்பை உருவாக்கியது.   அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவில் கலந்துக் கொள்ளப் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் பல பாஜக மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.  கடந்த 1992 ஆம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.   இதில் உமா பாரதிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த போது அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி வீடியோ மூலம் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.  அத்வானியிடம் சுமார் நான்கரை மணி நேரத்தில் கேட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில் தம் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.  முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

இதுவரை பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா தலைவர் மற்றும்  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை,   இந்நிலையில் ராம ஜென்ம பூமி தீர்த் ஷேத்திர டிரஸ்ட் அமைப்பின் பொதுச் செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம்  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் தொலைப்பேசி மூலம் அழைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி