காஷ்மீர் : உமர் அப்துல்லா பற்றிய கருத்தை திரும்பப் பெற்ற பாஜக தலைவர்

ஸ்ரீநகர்

பாகிஸ்தானின் ஆலோசனைபடி நடந்துக் கொள்வதாக உமர் அப்துல்லா குறித்து தெரிவித்த கருத்தை பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் திரும்ப பெற்றுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிடிபி கட்சி முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதற்கு மறுப்பு தெரிவித்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உமர் அப்துல்லா இந்தக் கூட்டணியில் இணைந்ததற்கு பாகிஸ்தான் ஆலோசனை காரணம் எனவும் இந்த கூட்டணி பாகிஸ்தான் ஆசி பெற்ற கூட்டணி எனவும் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராம் மாதவ் தெரிவித்த இந்த கருத்துக்கு உமர் அப்துல்லா தனது டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தனது பதிவில், “ராம் மாதவ் தாம் தெரிவித்த கருத்தை நிரூபிக்க வேண்டும் என நான் கூறுகிறேன். உங்களிடம் ரா, தேசிய புலனாய்வுத்துறை உள்ளிட்ட பல உளவுத்துறைகள், சிபிஐ கூட, உள்ளன. அதைக் கொண்டு இதை ஆராய்ந்து நிரூபியுங்கள். இல்லையெனில் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். இது போன்ற கேவலமான அரசியல் நிகழ்த்த வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு ராம் மாதவ் தனது டிவிட்டரில், “உமர் அப்துல்லா கூறியது போல் அவர் நாட்டுப் பற்று குறித்துநாஅன் ஏதும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் திடீரென உங்கல் கட்சிக்கும் பிடிபி கட்சிக்கும் இடையில் நேசம் வந்தது எப்படி என்பதும் உடனடியாக இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க கோருவதும் பல சந்தேகங்களை கிளப்புகிறது. உங்களை தாக்க நான் இதை தெரிவிக்கவில்லை” என பதிந்து அத்துடன் ஒரு சிரிக்கும் ஸ்டிக்கரையும் பதிந்துள்ளார்.

இதற்கு உமர் அப்துல்லா, “நகைச்சுவையாக பேசி நிலைமையை சமாளிக்க முடியாது. நீங்கல் எனது கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவானது என் பதிந்ததை நிறூபிக்க வேண்டும். எனது கட்சி குறித்த உங்கள் கருத்தை நிரூபிக்க தேவையான சாட்சிகளை உடனடியாக பகிரங்கமாக வெலீயிட வேண்டும்.” என பதிந்தார்.

இதற்கு ராம் மாதவ், “அய்ஸ்வாலில் இருந்து இப்போது தான் திரும்பி வந்து உங்கள் பதிவை பார்த்தேன். வெளியார் அழுத்தம் இல்லை என நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு நான் என் கருத்தை திரும்ப் பெற்றுக் கொள்கிறேன். உங்கள் கட்சிக்கும் பிடிபி கட்சிக்கும் இடையில் உண்மையான நேசம் உள்ளது எனவும் அதனால் ஆட்சியை அமைக்க உரிமை கோருவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இது அரசியல் கருத்து தானே தவிர உங்களைப் பற்றிய தனிக் கருத்து அல்ல” என பதிந்துள்ளார்.