2 வருடங்களில் ரூ.18000 சிறையில் சம்பாதித்த செக்ஸ் புகார் சாமியார் ராம் ரகீம்

ரோதக்

ரு வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாமியார் ராம் ரகீம் 15 கிலோ எடை குறைந்து ரூ.18000 சம்பாதித்துள்ளார்.

சீக்கியர்களின் மடமான தேராசச்சாவின் மடாதிபதி குர்மீத் ராம் ரகிம் என்னும் சாமியார் ஆவார்.  இவர் தனது ஆசிரமத்தில் வசித்த இரு பெண்களைத் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக புகார்கள் எழுந்தன.    அதையொட்டி மேலும் சில பெண்களும் இதே புகாரை அளித்தனர்.    ராம் ரகிம் சாமியார் மீது வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போது சில பெண்கள் புகாரை திரும்பப் பெற்றனர்.   ஆயினும் வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி அவருக்கு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் 20 ஆண்டுகள்  சிறை தனடனை வழங்கியது.   அதையொட்டி அவர் ரோதக் சிறையில் அடைக்கப்பட்டார்.   சாமியார் சிறையில் அடைக்கப்பட்டதால் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் கடும் கலவரம் ஏற்பட்டு அதன் பிறகு கலவரத்தைத் தூண்டியதாகச் சாமியாரின் வளர்ப்பு மகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இரு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள சாமியார் ராம் ரகீம் பாதுகாப்புக்காகச் சிறையில் பல அடுக்கு  பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.   அவர் இருக்கும் பகுதி நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.    அவருக்கு உதவியாக இருக்கும் மூன்று கைதிகளை தவிர வேறு யாருக்கும் அவருடன் பேசக்கூட அனுமதி அளிப்பதில்லை.   கடந்த 2 வருடங்களாகப் பல ஊடகவியலர்கள் அவரை சந்திக்க முயன்றும் முடியாத நிலை உள்ளது.   சிறை அதிகாரிகள் அவர்களில் யாரையும் அனுமதிக்கவில்லை.   அவர் குடும்பத்தினர் மட்டும் வாரம் ஒருமுறை அவரை சிறையில் சந்தித்து வருகின்றனர்.

முதலில் சாமியாரால் சிறை வாழ்க்கை ஒத்துக் கொள்ளாததால் அடிக்கடி உடல்நிலை குறித்து புகார் அளித்து வந்துள்ளார். தற்போது அவை முழுவதுமாக குறைந்துள்ளது.   சிறைக்கு வந்த போது 105 கிலோ எடையுடன் இருந்த சாமியார் தற்போது 15 கிலோ குறைந்து 90 கிலோ எடையுடன் இருக்கிறார்.  அவர் உருளை, சுரை,  தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடும் பணியை செய்து வருகிறார்.  இந்த காய்கறிகள் சிறையில் உணவு சமைக்க பயன்படுகின்றன.

சிறை விதிகளின்படி அவர் தேர்ச்சி பெறாத பணியாளர் என்னும் வகையில் வருவதால் அவர்  செய்யும் பணிக்குத் தினம் ரூ.40 ஊதியம் அளிக்கப்படுகிறது.  அந்த ஊதியம் மற்ற கைதிகளைப் போல் அவருடைய கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.  இதுவரை அந்தக் கணக்கில் ரூ.18000க்கும் மேல் சேர்ந்துள்ளது.  அவருக்கு எவ்வித சிறப்பு சலுகையும் சிறையில் அளிக்கப்படவில்லை எனச் சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.