மும்பை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், தற்போது ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 5ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் துணைபிரதமர் அத்வானி உள்பட சுமார் 200 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே,  “மக்கள் அனைவரும் தற்போது கொரோனா தாக்கத்தால் வேறுபட்ட மனநிலையில் இருக்கின்ற னர். இவ்வாறான நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. தற்போது உள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இதனை நடத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்றார்.

மேலும், தற்போதைய நிலையில், மக்களை கொரோனா அச்சத்திலிருந்து வெளியேற உதவுவது மிக்வும் அவசியம்.

மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் மக்கள் குழப்பத்திற்கு வழிவகுக்கின்றன.

மக்கள் நிம்மதியாக வாழ்வதை மத்திய மாநில அரசுகள்  உறுதிப்படுத்த வேண்டும். மாநிலத்தில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சரிவினை மீட்பதற்கு அரசு வலுவான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.