ராமர் கோவில் வழக்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குப் பூமி பூஜைக்கு அழைப்பில்லை

யோத்தி

யோத்தி ராமர் கோவில் வழக்கில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குப் பூமி பூஜைக்கு அழைப்பு அனுப்பவில்லை.

ராமர் கோவில் – பாபர் மசூதி பிரச்சினை பல வருடங்களாக உள்ளது.  கடந்த 1992 ஆம் வருடம் கரசேகர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து நாடெங்கும் கடும் கலவரம் வெடித்தது.  மசூதி இருந்த இடத்துக்கு உரிமை கோரி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய இரு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு சமயத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராக யோகா ஆசிரியர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் செயல்பட்டார்.  கடந்த 2017 ஆம் வருடம் இவர் நடத்திய பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்ள முன் வந்தனர்.  கடந்த வருடம் உச்சநீதிமன்றம் இவரை மூவர் மத்தியஸ்த குழுவில் ஒருவராக இணைத்துக் கவுரவித்தது.

சென்ற நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.   உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க மத்திய அரசு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் என்னும் அமைப்பை நிறுவியது.   இன்று கோவிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த விழாவுக்கு கோவில் அமையப் பாடுபட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. அத்துடன் வழக்கில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கும் பூமி பூஜையில் கலந்துக்  கொள்ள அழைப்பிதழ் அனுப்பவில்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.