3மாதங்களுக்குள் ராமர்கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்படும்! மக்களவையில் அமைச்சர் உறுதி

டெல்லி:

3மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்படும் என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த நவம்பர் மாதம் 9ந்தேதி அன்று வழங்கியது.

இந்த நிலையியில் ராமர்கோவில் தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில்,  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கான புதிய அறக்கட்டளையை அமைப்பது அரசின் கடமை என்றும்,  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களுக்குள் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், அந்த அறக்கட்டளையில் இடம் பெற வேண்டிய அறங்காவலர்கள் யார், யார், அவர்களின் அதிகாரம் என்ன?,  அறக்கட்டளை செயல்படும் விதம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர்,  ” கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 84 முறை ஊடுருவல்கள் முயற்சி நடந்துள்ளது.

நடப்பு ஆண்டு  டிசம்பர் 1-ம் தேதிவரை 22 ஆயிரத்து 557 தீவிரவாதிகளின் ஊடுருவ முயற்சி செய்துள்ளதாகவும், அவர்களின்  முயற்சிகள், தாக்குதல்கள் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 1011 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், 42 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.