தீபாவளி அன்று ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்….சுப்ரமணியன் சுவாமி

டில்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தீபாவளி அன்று தொடங்கப்படும் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ 2014ம் ஆண்டில் பாஜக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. 3 பெரிய வாக்குறுதிகளில் 2 நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்துத்வாவை வளர்க்க வேண்டும் ஆகியவற்றில் 2 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள பணத்தை மோடி அரசு திரும்ப கொண்டு வரவில்லை என்றாலும், 4 ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை போல் ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை. 2019ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் பாஜக வெற்றி பெறும். 2014ம் ஆண்டு தேர்தலை விட 10 இடங்கள் அதிகமாக வெற்றி பெறும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இது குறித்து அமித்ஷா கூறினாரா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் வரும் தீபாவளிக்கு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜிஎஸ்டி அவசியம் என்ற கருத்து ஏற்புடையதல்ல. பணமதிப்பிழப்புக்கு முன் மத்திய நிதியமைச்சகம் அதற்கு தயாராகவில்லை. 2019ம் ஆண்டு தேர்தலில் எனது பங்களிப்பு என்ன? என்பதை அமித்ஷா முடிவு செய்வார்’’ என்றார்.

You may have missed