Random image

உச்சநீதிமன்றம் நம்முடையது!! ராமர் கோவில் கட்டியே தீருவோம்…பாஜக அமைச்சர் பேச்சு

லக்னோ:

உச்சநீதிமன்றம் நம்முடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று உத்தரபிரதேச பாஜக அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் கூறி வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில அமைச்சர் முகுத் பிகாரி வர்மா இது குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

‘‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம். நாம் எல்லாம் அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டனர்கள். அதனால் ராமர் கோவில் கட்டுவது உறுதி. ஏன் என்றால்?, உச்சநீதிமன்றம் நம்முடையது. இந்த நாடு, நீதித்துறை, உச்சநீதிமன்றம், கோவில் என அனைத்துமே நம்முடையது’’ என்று முகுத் பிகாரி பக்ரைச்சில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர் 4 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளார். 2019ம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமர் கோவில் பிரச்னையை பதற்றத்துடன் வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது குறித்து அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மலுப்பலாக பதிலளித்தார். இவர் இத்தகைய சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்தபோது அருகில் தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா இருந்தார். இந்த கருத்து தொடர்பாக அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.