இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்

லக்னோ:

இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்றும், ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் கூறினார்.


உத்திரப் பிரதேச மாநிலத்தில் கும்பமேளாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் கலந்து கொண்டபோது, ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மோடி அரசுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கோஷமிட்டனர்.
மேலும், கோயில் கட்ட தேதி குறிக்கவும் கோஷமிட்டனர்.

அப்போது பேசிய மோகன் பகாவத், “ராமர் கோயில் கட்டுவார் என்றுதான் கடந்த தேர்தலில் மோடிக்கு வாக்களித்தேன்.  இன்னும் காத்திருக்குமாறு அவர்கள் கூறுகிறார்கள். கொடுத்த வாக்கை தூக்கி எறிந்துவிட்டார்கள். அவர்கள் நம்மையும், ராமரையும் வாக்குக்காக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தியா இந்துக்களின் நாடு. இன்னும் 6 மாதங்கள் பொறுத்திருங்கள்.  நம் திட்டத்தை பற்றி சிந்திப்போம். நமது கோரிக்கையை நினைவுபடுத்துவோம். அதற்குள் நடந்தால் நல்லது.

ராமர் கோயில் கட்ட மோடி அரசை நோக்கி வலதுசாரிகள் சாட்டையை சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நிச்சயம் அவர்கள் கோயில் கட்டுவார்கள் என்றார்.

நமது போராட்டத்தால் பாஜக அரசுக்கு சிரமம் ஏற்படக்கூடாது, மாறாக நாம் கோயில் கட்ட உதவியாக இருக்க வேண்டும் என்றார்.