ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும்  அயோத்தி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார். முன்னதாக இதே வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்றம் சுமார் ஆயிரம் பக்கங்களைக்கொண்ட விரிவான தீர்ப்பை 2010ம் ஆண்டு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டது என்ன என்பதை பார்க்கலாம்….

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. அதன்படி சர்ச்சைக்குரிய  2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், அயோத்தி நிலம் மூன்றாக பிரிக்கப்படுவதாகவும், அதில் ராம் லல்லாவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், சன்னி வக்ஃப் அமைப்புக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், நிர்மோஹி அகராவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் என்று பிரிக்கப்பட்டது.

தீர்ப்பின்போது,   சர்ச்சைக்குரியதாக இடத்தின் மீது யாருக்கு முழு உரிமை உள்ளது என்பது தொடர்பாக முஸ்லீம்களின் சுன்னி வக்ஃப் வாரியம், இந்துக்களின் நிர்மோகி அகாரா ஆகிய இரண்டு அமைப்புகளின் மனுக்களை நிராகரித்தனர்.

மேலும், சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், மற்றொரு பகுதி சுன்னி வக்ப் வாரியத்திற்கும், மற்றொரு பகுதியான பாபர் மசூதியின் நடுப்பகுதியே ராமர் பிறந்த இடம் என்று கூறியதுடன் அந்த பகுதி இந்து அமைப்பான ராம் லல்லாவுக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதுபோல, வழக்கின் விசாரணையின்போது,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதி சட்டப்படி தகராறுக்கு உட்பட்ட பகுதியாக ஆனபோதே அங்கு ராமர் சிலை இருந்ததாக இந்து அமைப்புகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொள்வதாக அந்த அமர்வில் உள்ள இரண்டு நிதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

இறுதியாக தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளும், பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான்,  இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், சர்ச்சைக்குரிய இடம் தங்களுடைய தீர்ப்பின் படி பிரித்தளிக்கப்படும் வரை அந்த இடத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வழக்கில் மூன்று நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பின் முழு விவரம் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தல் நடைபெற்ற வாதங்கள் என்ன?

ராமஜென்ம பூமி வழக்கில்,  ராம்லல்லா விரஜ்மான் அமைப்பு தரப்பில்,  அயோத்தியில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாக ஃபைசாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் 1886-இல் சிவில் வழக்கில் குறிப்பிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், கோவில் கட்ட அனுமதி மறுத்த நீதிமன்றம், அந்த இடத்திற்கான நிலம் இந்து அமைப்புக்கு உடையது என்றும்,  அந்த இடம்  இந்துக்களுக்கானது இல்லை என்பதை முஸ்லிம் தரப்பினர் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் கட்சிகள்,  1885ம் ஆண்டு  இந்த நிலப் பிரச்சினையில் தீர்வு காணப்பட்ட சட்டமாக ஒப்புக் கொள்ள முடியாது என்று வாதிட்டதுடன், பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் உள்ள சபுத்ரா மற்றும் அடுத்தடுத்த உள்ள பகுதிகளும் சர்ச்சைக்குரிய இடத்தை உள்ளடக்கியது என்று கூறினர்.

அதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் சார்பில் வாதிடும்போது,  சர்ச்சைக்குரிய கட்டிடம் 1528 ஆம் ஆண்டில் பாபரால் கட்டப்பட்டது என்பதை இந்து தரப்பு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ராமர் பிறந்த இடமான  ரா ஜென்மபூமி என்ற இடம்  தெய்வீகமானது. அங்கே ஒரு சிலைகூட இல்லை என்றாலும் அது தெய்வம்தான். அதனால், நிலம் எப்போதும் இந்துக்களுக்கே சொந்தமானது என்றும் வளாகத்தில் உள்ள ஒரு மசூதி அதனுடைய தெய்வீகத் தன்மையை மாற்றாது என்றும் கடுமையாக வாதிடப்பட்டது.

விசாரணையின்போது வாதாடிய அகாரா தரப்பு வழக்கறிஞர், ராம ஜென்மபூமியை சட்டப்பூர்வ இடமாக கருத முடியுமா என்பதை நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அந்த இடத்திற்கான நிலத்திற்கான உரிமை தங்களிடம் இருப்பதாகவும்,  அதற்கு ஷெபைட் உரிமைகள் இருப்பதாகவும், சிலையையும் அதன் சொத்தையும் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது.

பின்னர் வாதாடிய இஸ்லாமிய தரப்பு வழக்கறிஞர்கள், 1528 ஆம் ஆண்டு மசூதி கட்டப்பட்டது முதல், இந்த பகுதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. அப்போது இந்துக்கள் யாரும் உரிமை கோரவில்லை என்றும்,  1989ம் ஆண்டுகளுக்கு பிறகே இந்துக்கள் அந்த பகுதி தங்களுடையது என்று உரிமை கோரி வருகின்றனர் என்று கூறியது.

மேலும், அந்த நிலம் இந்து அமைப்புகள்  வைதிருந்தார்களானால், 1934 ஆம் ஆண்டு கலவரத்தில் பாபர் மசூதியின் ஒரு குவிமாடம் ஏன் வீழ்த்தப்பட்டது? அவர்களுக்கு ஏற்கெனவே உரிமை இருந்திருந்தால் 1949 ஆம் ஆண்டு சிலைகளை நிறுவ ஏன் அத்துமீறப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வாதாடிய இந்து அமைப்பினர்,  பாபர் மசூதி நிலத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே ஒரு பெரிய கட்டமைப்பு இருந்தது. அது காலியான இடமோ அல்லது விவசாய நிலமோ அல்ல என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையை ஆதாரமாக சமர்ப்பித்தனர்.

ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் (ஏ.எஸ்.ஐ) அறிக்கைகள் சிறந்த நிபுணர்களின் கருத்துக்கள் என்று இந்த வழக்கை தீர்மானிக்க ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் ஏ.எஸ்.ஐ. அதிகாரிகளால் தொல்பொருள்கள் பற்றி அளிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் உள்ளது என்று குறிப்பிட்டதுடன், தொல்லியல்துறை ஆதாரத்தை கருத்தில்கொள்ளக்கூடாது என்றும்,  இந்து தரப்பினரால் நம்பப்பட்டும் வரலாற்று  புத்தகங்களையும் வரலாற்றுக் நிகழ்வுகளாக கருத முடியாது என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள் 1949 டிசம்பர் 22-23 இரவில் வைக்கப்பட்டதா அல்லது அவை ஏற்கெனவே இருந்ததா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக வாதங்களை எடுத்துவைத்த இந்து அமைப்புகள்,  1935-க்கு முன்னரே சிலைகளும் கர்ப்ப கிரகமும் பாபர் மசூதியில் இருந்தது என்று குறிப்பிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள்,  சிலைகளை மத்திய குவிமாடத்தின் கீழ் வைப்பது ஒரு திட்டமிட்ட மறைமுகமான தாக்குதல் மற்றும் அத்துமீறல் என்று வாதிட்டது.

அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாபர் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததா? என்றனர்.

இதற்கு பதில் அளித்த இந்து அமைப்புகள்,  1855 க்கு முன்னர் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததாக தெரிவித்தது.

அதையடுத்து இஸ்லாமிய தரப்பு சார்பில் வாதாடியபோது, 1949ம் ஆண்டு முன்னர் அந்த பகுதியில்  ராம் சபுத்ரா, இந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தது என்பதை ஒப்புக்கொள்வதாகவும். ஆனால், இந்துக்கள் அந்த இடத்தின் மீது உரிமை கொண்டிருக்கவில்லை என்றும் பிரார்த்தனை செய்ய மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, நிலம் யாரிடம் இருந்தது சொத்துப் பத்திரம் யார் வைத்திருந்தார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் தெரிவித்த இந்து அமைப்புகள்,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மட்டுமல்லாமல், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலமும் இந்துக்களே சொந்தமானது என்று கூறினார்.

தொடர்ந்து வாதாடிய உத்தரப்பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம், 1989 ஆம் ஆண்டு ராம்லல்லா விரஜ்மான் தெய்வத்தின் சார்பாக 1989-இல் சிறப்பு உரிமையாளர்கள் உரிமை கோரப்படும் வரை, நிர்மோஹி அகாராவும் வஃப் வாரியமும்தான் அந்த இடத்தின் உண்மையான சட்டப்பூர்வ ஒரே உரிமையாளர்கள் என்று வாதிட்டது.  மேலும், அந்த இடத்துக்கு உரிமைக் கோர, அகாராவுக்கு கடமைகளும் உரிமைகளும் இல்லை என்றும் மறுத்தது.  மேலும், அது ராம் சபுத்ராவின் வெளி முற்றத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்கும் என்றும் கூறியது. 1992 டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் அங்கே மசூதி இருந்ததால் அதை மீட்டெடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் வாதிட்டனர்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் பாபர் மசூதி முறையான மசூதியாக இருந்ததா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த இந்துஅமைப்புகள் வழக்கறிஞர்,  மசூதியின் தூண்களில் தேவநாகரி எழுத்தில் கல்வெட்டுகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஏ.எஸ்.ஐ அறிக்கைகளை மேற்கோள் காட்டியது. மேலும், இஸ்லாத்தின் கொள்கைகளின்படி இந்த அமைப்பு சரியான மசூதி அல்ல என்றும், தொழுகை நடத்தப்படும் எல்லா இடத்தையும் மசூதியாக கருத முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு, மசூதியில் தொழுகை நடத்தப்பட்டதாகவும்,  சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்ட நாளிலிருந்து அது ஒரு மசூதியாக உள்ளது என்று முஸ்லிம் தரப்பு கூறியது. 1934 ஆம் ஆண்டு கலவரங்களுக்குப் பிறகும் நமாஸ் செய்யப்பட்டது என்றும் பாபர் மசூதி தொழுகைக்கு ஒரு இமாம் தலைமை தாங்கினார் என்றும்  வாதிடப்பட்டது.

அத்துடன்,  மசூதியை நிர்மாணிப்பதை இறையியலின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது. ஆனால், வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியும் என்று கூறியது.

இவ்வாறு பரபரப்பாக நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்தே அலகாபாத் உயர்நீதி மன்றம், ராமஜென்ம பூமியை 3 அமைப்புகளுக்கும் பிரித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி  சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், மற்றொரு பகுதி சுன்னி வக்ப் வாரியத்திற்கும், மற்றொரு பகுதியான பாபர் மசூதியின் நடுப்பகுதியே ராமர் பிறந்த இடம் என்று கூறியதுடன் அந்த பகுதி இந்து அமைப்பான ராம் லல்லாவுக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சுமார் 40நாட்கள் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.