சென்னை:

ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரை  கைது செய்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இன்று சென்னை தி.நகரில்  நடைபெற்ற  தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1247 பயனர்களுக்கு தங்கம் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமாரிடம். நிகழ்ச்சி முடிந்ததும், ஜெ. சிகிச்சை குறித்து முன்னாள் தலைமை செயலாளர்  ராமமோகன் ராவ் கூறியது குறித்து செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ராமமோகனராவ் அதிகாரி போல் பேசாமல் அரசியல்வாதி போல் செயல்படுகிறார். யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கில் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

அதுபோல ஸ்டெர்லைட் விவகாரம் குறித்த கேள்விக்கு,  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் யார்  லஞ்சம் வாங்கினர், ,எப்போது வாங்கினர், எவரிடம் வாங்கினர் என்று தெளிவுபடுத்த வேண்டியது பொறுப்புள்ள அமைச்சரின் கடமையாகும்.

ஏதோ தெருவில் போகிறவர் மாதிரி சொல்லக் கூடாது. மத்திய மந்திரி என்றால் அதில் பொறுப்பு இருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்வோடு அருமை சகோதரர் இருப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்