பத்திரிக்கையாளர்களை மிரட்டிய கட்சி நிர்வாகிகள் மீது ராமதாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்! உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: பத்திரிக்கையாளர்களை மிரட்டிய கட்சி நிர்வாகிகள் மீது பாமக தலைவர் ராமதாஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து பேசினார் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின், பாமகவின் வன்முறை குறித்த  கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க மறுத்து, அன்புமணி ராமதாஸ் இடையிலேயே ஓட்டம் பிடித்தார். அதைத்தொடர்ந்து அவருடன் வந்த பாமகவினர் பத்திரிகையாளர்களை மிரட்டினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  முதலமைச்சர் அலுவலகத்தின் எதிரிலேயே பத்திரிகையாளர்களை மிரட்டிய பாமக தொண்டர்களின் செயலை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT )சார்பில் கண்டிக்கிறோம். ஆர்ப்பாட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பத்திரிகைகளை தாக்க முயற்சி செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது.  இந்தச் செயலானது பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு இல்லாதது போல் காட்டுகிறது.  பத்திரிக்கையாளர்களை மிரட்டிய கட்சி நிர்வாகிகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.