சென்னை:

முதுநிலை மருத்து படிப்பில், மாணவர் சேர்க்கையில், கிராமப்புற பகுதிகளில் வேலை செய்யும் மருத்துவர்க ளுக்கு  ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முதினம்  ரத்து செய்தது.

இது தமிழக மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன,  அரசு மருத்துவர்களுக்கு சமூகநீதி வழங்க தமிழக அரசின் திட்டம் என்ன? என்று பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி விடுத்துள்ளார்.

அரசு டாக்டர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் ஆணையை உயர்நீதி மன்றம் ரத்து  செய்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான தமிழக அரசின் ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த பின்னடைவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிகளை கடந்த ஆண்டு இந்திய மருத்துவக் குழு அறிவிக்கும் வரை தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூகநீதி பாதுகாக்கப் பட்டு வந்தது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ளவற்றில் பாதி இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை தேவை என்று கூறி இம்முறையை இந்திய மருத்துவக் குழு ரத்து செய்தது.

அதற்கு மாற்றாக மலைப்பகுதிகள், தொலைதூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கலாம் என்று மருத்துவக் குழு அறிவித்திருந்தது. இது ஒரு அரைகுறையான ஏற்பாடு தான் என்றாலும் கூட, இந்த முறையை சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் பெரும்பான்மையான அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடம் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், தமிழக அரசோ, ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறையை ஏராளமான குறைபாடுகளுடன் தயாரித்தது. இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருந்த போதே, இத்திட்டத்தை அரசு மருத்துவர்களே ஏற்க மாட்டார்கள்; இதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளாது என்று எச்சரித்திருந்தேன். ஆனால், அதை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இ

தை எதிர்த்து சில மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் ஊக்க மதிப்பெண் திட்டம் தொலைதூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாதகமாகவும், கூடுதல் சலுகைகளுடன் நகரங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி இது தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து விட்டது.

இதனால், முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்குவதற்கான இரு வாய்ப்புகளும் பறி போய் விட்டன. இத்தகைய சூழலில் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடம் பெற்றுத்தர தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்பது தான் அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி, சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவர் மனதிலும் எழுந்துள்ள வினாவாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான தமிழக அரசின் திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் முதல் பார்வையிலேயே அப்பட்டமாக தெரியும் என்பதால் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.

மீண்டும் புதியத் திட்டத்தை உருவாக்க உச்சநீதிமன்றம் ஆணையிடும். முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை இது தாமதமாக்கும் என்பதுடன், பின்னடைவையும் ஏற்படுத்திவிடும்.

தமிழக அரசின் முன் உள்ள இரண்டாவது வாய்ப்பு, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு முன்பிருந்தவாறே 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பை பெறுவதாகும்.

இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு விரிவாக விசாரிக்க உள்ள நிலையில், மே மாத இறுதிக்குள் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பதால், அடுத்த வாரத்தில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் புதிய விதிகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு சாதகமாகவும் தீர்ப்பளிக்குமா? என்பது ஐயம் தான். இதை நம்புவதால் எந்த பயனும் கிடைக்காது.

ஒருபுறம் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டையும் இழந்தால் சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் வர மாட்டார்கள். இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 விழுக்காட்டை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது தான். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பினாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.