திண்டிவனம்: பெரியார் குறித்த நடிகர் ரஜினியின் தேவையற்ற கருத்துக்கு, நீண்ட தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாக எதிர்வினையாற்றியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து, யாரோ சொல்வதைக் கேட்டு, எந்தவிதப் புரிதலும் இல்லாமல் ஒரு கருத்தைப் பேசினார். இதற்கு பல கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்வினையாற்றின.

ஆனால், ராமதாஸ் தரப்பிலிருந்து இதற்கு எந்தவித மறுப்பும் வராமல் இருந்தது. ராமதாஸின் அரசியல் திட்டம் என்ன? என்று பலவித கேள்விகளும் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக நீண்ட தாமதத்திற்கு பின்னர் எதிர்வினையாற்றியுள்ளார் அவர்.
அதேசமயம், ரஜினியை வலிக்காமல் அடித்துள்ளார் ராமதாஸ்.

“பெரியார் எங்களின் அரசியல் வழிகாட்டி. அவர் பகுத்தறிவு பகலவன். தமிழக அரசியலில் அவர் மிகவும் முக்கியமானவர். அவரின் கருத்துகள்தான் இன்றளவும் தமிழக அரசியலில் முக்கியமானதாக உள்ளது. அவரின் கருத்துக்களை அனைவரும் ஏற்க வேண்டும்.

ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கக்கூடாது. பெரியாரைப் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம். எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் ரஜினி, இந்தமுறை அவசரப்பட்டுவிட்டார்” என்று மிகவும் மென்மையாக எதிர்வினையாற்றியுள்ளார் ராமதாஸ்.