சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட பாமக கட்சி நிர்வாகிகள் இன்று திடீரென சந்தித்து பேசினர். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, பாஜக தலைமையிலான  கூட்டணியில் பலத்த இழுபறிக்கு பின்பு தேமுதிக இணைந்தது. இந்த நிலையில்,  பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் இன்று காலை திடீரென விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது அரசியல் உரசல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், அதிமுக கூட்டணியிலும், தங்களுக்கு முன்பாக பாமகவை சேர்த்தது ஏன் என்றும், அவர்களுக்கு ஒதுக்கி யதுபோல தங்களுக்கும்  தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக, பாஜகவிடம்  அழுத்தம் கொடுத்து வந்த  தேமுதிக, பலத்த இழுபறிக்கு பின்பு வேறுவழியில்லாமல் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது.

இந்த நிலையில்,   தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்து இருக்கிறார். சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ் அவரை சந்தித்தார். தற்போது இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ராமதாஸ் உடன்  பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் , ஜிகே. மணி, அதிமுக உறுப்பினர்கள், கோகுல இந்திரா, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செ யலாளர் சுதீஷ் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருக்கிறார்கள். இதனால் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இரு கட்சிகளும் ஒரே தொகுதிகளை கேட்பதால், அதுகுறித்து பேசி முடிவு செய்யவே இந்த பேச்சு வார்த்தை என்று தகவல் வெளியாகி உள்ளது.