தனிப்படை அமைத்து போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்!:  ராமதாஸ் வலியுறுத்தல்

தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள் விற்பனை ஒழிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்றைய நாகரிக உலகில் இளைஞர்களும், சிறுவர்களும் போதைப்பழக்கத்திற்கு ஆளாவதற்கு ஏராளமான தூண்டல்களும், சூழல்களும், வாய்ப்புகளும் உள்ளன. அவற்றால் திசைமாறி போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தும் கடமையும், பொறுப்பும் அரசுக்கும், காவல் துறைக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக சென்னையிலும், மாவட்டங்களிலும் துடிப்பான இளம் காவல் உதவி ஆணையர்கள், துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப்பொருள் விற்பனை ஒழிக்கப்பட வேண்டும்.

 

போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் வருவோரின் விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதுடன் அவர்களுக்கு ரூ.10,000-க்கும் குறையாமல் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்தல், சிக்காமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்துப்பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தனிமை உணர்வு, விரக்தி, மன அழுத்தம் ஆகியவை தான் மாணவர்களையும், இளைஞர்களையும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்குகின்றன என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும்.

நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல இசையை கேட்டு ரசித்தல், யோகா மற்றும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறாக போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு, காவல்துறை, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என அனைவரும் பாடுபட வேண்டும்” –  இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.