விஜய்க்கு ராமதாஸ் எச்சரிக்கை

நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடிகர் விஜய்யை எச்சரித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் சர்கார். இந்தப் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார்.

 

“திரைப்படங்களில் புகை, மது காட்சிகளை தவிர்க்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணியும் இதைக் கண்டித்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “சர்கார் திரைப்படத்தின் விளம்பரத்தில், நடிகர் விஜய் புகை பிடிப்பது மாதிரியான படத்தை பார்த்ததும் எனக்கு கடுமையான கோபம் வந்தது.

நடிகர் விஜயும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக பணம் வாங்கிக் கொண்டே, புகைக்கும் காட்சியை சர்கார் படத்தில் வைத்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்கார் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி எனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்.

ஆனால் தற்போது சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெறக்கூடாது என்று விஜய் மற்றும் சன் பிக்சர்சுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி எந்த படத்தையும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.