ராமநாதபுரம் : கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட மூதாட்டி மரணம்

ராமநாதபுரம்

கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி  திடீரென மரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் அருகே கும்பரம் என்னும் சிற்றூர் உள்ளது.  இங்கு வசிக்கும் நாகநாதன் என்பவரின் மனைவி 61 வயதான கோகிலவாணி என்பவர் ஆவார்.  இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நேற்று ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இவருக்கு கொரோனா தொற்று உள்ளதாகச் சந்தேகம் எழுந்ததால் இவருடைய இரத்த மாதிரி எடுக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.  இன்று மாலை கோகிலவாணி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  கோகிலவாணியின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்,”கொரோனா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதால் மூதாட்டியின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  முடிவு தெரிவதற்குள் அவர் இறந்து விட்டார்.

அவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகளும் உள்ளதால் கொரோனாவால் இறந்தார் எனக் கூற முடியாது.  சோதனை முடிவு வந்த பிறகுதான் உறுதியாகக் கூற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.