ராமநாதபுரம்: துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரின்  ரத்த மாதிரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஓராண்டாக உலக பொருளாதாரத்தையேப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது புதிய பரிணாமத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.   கொரோனா தொற்றின் இந்த புதிய வடிவம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மரபியல் மாற்றம் பெற்றுள்ளது. இநத கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து  பல நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  துபாயில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு உருமாறிய கொரோனாவாக இருக்கும் என்ற அச்சத்தால் அவருடைய ரத்த மாதிரிகள் மும்பையில் உள்ள சோதனை அலுவலகத்துக்கு அனுப்பி அவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லண்டனில் இருந்து தேனி வந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அவரது அப்பா மற்றும் அத்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.