ராமண்ணா வியூவ்ஸ்:
நண்பர் சுகன் இன்று அலுவலகம் வந்திருந்தார். நண்பர் என்றாலும், மூத்தவர். பல வருட பத்தரிகை அனுபவம் கொண்டவர்.
தற்போதைய பத்திரிகை, ஊடக சூழல் குறித்து பேச்சு வந்தது. அப்போது அவர், “பெரிய தலைவர் ஒருவர் பத்திரிகையாளர்களை பற்றி   என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா” என்று கேட்டுவட்டு, தனது மெயிலில் இருந்து எனக்கு ஒரு பக்கத்தை அனுப்பினார்.

ராமண்ணா
ராமண்ணா

அப்பப்பா… வார்த்தைகளா அவை.. சாட்டையடிகள்!
இதோ அந்த பெரும் தலைவர், பத்திரிகையாளர்கள் பற்றி பேசுகிறார், கேளுங்கள்:
“இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன். பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள்.
நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல், எங்களைப் பற்றி  தவறாகவும், புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே புளுகுவான்.
தோழர்களே!
நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்கிறேன்.  வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள்.
நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10.000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே! நான் மக்களிடம் பேசும் போது கூட, “நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள்” என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.
இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும், தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை.
இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்? ” – இப்படி பேசியிருக்கிறார் அந்த பெரும் தலைவர்.
நான் படித்து முடிக்கும்வரை காத்திருந்த நண்பர் சுகன், “இதை யார் பேசியிருப்பார் என்று யூகிக்க முடிகிறதா” என்றார்.
“தந்தை பெரியார் தவிர வேறு யார் இப்படி பேசியிருக்க முடியும்” என்றேன்.
“சபாஷ்” என்று பாராட்டிய சுகன், “1961ம் ஆண்டு மதுக்கூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்தான் பெரியார் இப்படி பேசினார்” என்ற உபதகவலையும் கூறி விடைபெற்றார்.