ராமசாமி படையாட்சியார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்!: காங்கிரஸ் பிரமுகர் வாழப்பாடி. இராம. சுகந்தன் வலியுறுத்தல்

ராமசாமி படையாட்சியார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரும், “இராஜீவ் காந்தி  வாழப்பாடி. இராமமூர்த்தி அறக்கட்டளை”யின் மேலாண்மை அறங்காவலருமான வாழப்பாடி இராம. சுகந்தன், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

ராமசாமி படையாட்சியார்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவது:

“தமிழ்நாட்டின் ஒற்றைப் பெரும்பான்மை சமூகம், வன்னியர் சமூகம். இந்த சமூகத்துக்கு ஏராளமான தலைவர்கள் வாய்த்தார்கள். இவர்களுள் விடுதலைப் போராட்ட வீரரும், உழைப்பாளர் கட்சியின் தலைவருமான கடலூர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் வித்தியாசமானவராகத் திகழ்ந்தார்.

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் மதராஸ் மாகாணத்தில் அவரது உழைப்பாளர் கட்சி 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. நான்கு எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றியது.

இவரது ஆதரவு காரணமாகத்தான் 1952ல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் ஆட்சி அமைக்க முடிந்தது. தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த படையாட்சியார், 1980 முதல் 1989 வரை காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக செயலாற்றினார்.

வாழப்பாடி. இராம.சுகந்தன்

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்ந நாளை (செப்டம்பர் 16) அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவரான படையாட்சியாரை கவுரவிக்கும் பொருட்டு, மாவட்டம் தோறும் அவரது நூற்றாண்டு விழாவையும் தமிழக அரசு சிறப்பாக கொண்டாட வகை செய்ய வேண்டும்”  இவ்வாறு இராம.சுகந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.