ஊரடங்கு – பலதரப்பு உதவிகளைப் பெறும் ராம்போ சர்க்கஸ்!

புனே: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராம்போ சர்க்கஸ் கலைஞர்களுக்கு உதவ பலதரப்பாரும் முன்வந்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வருகிறது புகழ்பெற்ற ராம்போ சர்க்கஸ். மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளதால், சர்க்கஸ் நிர்வாகம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் ஊழியர்கள் பட்டினியில் வாடும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த சர்க்கஸின் இக்கட்டான நிலை, சமூக வலைதளங்கள் வாயிலாக பரவியதையடுத்து, அதற்கு உதவுவதற்கு, தன்னார்வலர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளும் முன்வந்துள்ளனர்.

ராம்போ சர்க்கஸில் 80 பணியாளர்கள், 17 நாய்கள் உட்பட 20 விலங்குகள் போன்றோர் உள்ளடக்கம். மேலும், தற்காலிக ஊழியர்கள், சமையல்காரர்கள், கூடாரங்களை வடிவமைப்பவர்கள் போன்றோரும் உண்டு.

தங்களின் இக்கட்டை அறிந்து, தங்களுக்கு கிடைத்துவரும் உதவியால், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக ராம்போ சர்க்கஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.