டில்லி:

சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 50 டன் செம்மர கட்டைகளை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைப்பற்றினர். இது தங்களுக்கு சொந்தமானது என்று யோகா சாமியார் ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த பறிமுதலை எதிர்த்து பதஞ்சலி நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

டிஆர்ஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தின் சரக்கு முணையத்தில் 50 டன் எடைக்கும் மேலான செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதஞ்சலி நிறுவன பிரதிநிதியின் பாஸ்போர்ட், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்திற்கு மட்டும் ‘சி’ தர செம்மர கட்டைகள் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த செம்மர கட்டைகள் சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ தர செம்மர கட்டைகள் கலந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது’’ என்றனர்.

இது குறித்து பதஞ்சலி நிறுவன செய்தி தொடர்பாளர் இ.மெயில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ இந்த செம்மர கட்டைகள் ஆந்திரா வனத்துறை மேம்பாட்டு கழகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டது. இது வரை நாங்கள் ஏற்றுமதி செய்தது கிடையாது.

சிகப்பு செம்மர கட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. நாங்கள் தவறாகவோ? சட்ட விரோதமாகவோ? எதுவும் செய்யவில்லை. அனைத்து சட்டப்படி தான் செய்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் டிஆர்ஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.