ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!: சிறை காவலர் அதிரச்சி தகவல்

--

சென்னை:

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜூடன் நேற்று மாலை பேசிய சிறை காவலர், ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று  தெரிவித்திருந்தது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று மாலை  நாலரை மணியளவில் மின்சார வயரைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், சிறை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பிறகு,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் வழியில் ராம்குமார் இறந்து விட்டதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமராஜ்
ராமராஜ்

ஆனால் நேற்று மாலை ஆறு மணியளவில் புழல் சிறைக்குத் தொடர்பு கொண்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், “ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரவியிருக்கிறதே” என்று கேட்க,  அங்கிருந்த சிறைக்காவலர் “தற்கொலை முயற்சி செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவை வழக்கறிஞர் ராம்ராஜ் வெளியிட்டார்.

ஆகவே ராம்குமார்  எப்படி இறந்தார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அந்த ஆடியோவில், சிறைக்காவலர், “டாக்டர் ஏதோ சாப்பாடு சரியில்லை (புட் பாய்ஸன்) ன்னு சொல்லிட்டிருந்தார். ராம்குமாரின் வீட்டுக்கும் இதுகுறித்து போன் செய்து இதையே கூறினேன்” என்கிறார்.

வழக்கறிஞர் ராமராஜ், “ராம்குமாருக்கு வேறு ஒன்றும் இல்லையே..” என்று மீண்டும் கேட்கிறார். அதற்கு காவலர் மீண்டும், “வேறு ஒன்றும் இல்லை சார்” என்று  அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

“சிறைக்காவலர் தெரிவித்த இந்தத் தகவல் ராம்குமார் மரணம் குறித்த மர்மத்தை மேலும் அதிரித்துள்ளது” என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.