ராம்மோகன் ராவ் கேள்விகளும் வருமானவரித்துறை பதில்களும்.. விரிவாக

சென்னை,

னது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியது குறித்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு வருமானவரித்துறை விளக்கம் அளித்ததை நேற்றே வெளியிட்டிருந்தோம்.

தற்போது வருமானவரித்துறையின் விரிவான பதில்கள்..

ராம் மோகன ராவ்: தலைமை செயலாளரான என் வீட்டிலேயே ரெய்டு நடத்தலாமா?

வருமான வரித்துறை: வருமான வரிச்சட்டம் 132வது பிரிவின் படி ஒருவரது வீடு வாகனம் அல்லது வேறு ஏதாவது இடத்தில் கருப்பு பணம் பதுக்கியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் சோதனை நடத்தலாம் என அதிகாரம் கொடுத்திருக்கிறது.

ராம் மோகன ராவ்: துணை ராணுவப்படையை அழைத்து வருவது மாநிலத்தின் அதிகாரத்துக்கு எதிரானது அல்லவா?

வருமான வரித்துறை: 132(2) படி சோதனை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்கு தேவை என்றால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள உரிமை உண்டு. அது மாநில காவல்துறை யாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ராம் மோகன ராவ்: யாருடைய அனுமதி பெற்று தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்தார்கள். தவிர , துணை ராணுவப்படை அங்கு எப்படி செல்லலாம்?

வருமான வரித்துறை: ஐஏஎஸ் அதிகாரியான சிவதாஸ் மீனாவிடம் அனுமதி பெற்றோம். தவிர துணை ராணுவப்படையினர் உள்ளே வரவில்லை தங்கள் வாகனத்தில்தான் இருந்தனர்.

ராம் மோகன ராவ்: என் அனுமதி இல்லாமல் என் அறையில் சோதனை நடத்தலாமா?

வருமான வரித்துறை: விசாரணைக்கு தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ராவின் இரு செல்போன்கள் அவரது தலைமைச்சயலக அறையில் இருப்பதாக அவரே தெரிவதி்தார். இதனா லேயே அவரது அலுவல அறையில் சோதனை நடத்தப்பட்டது. செல்போன் கைப்பற்றப்பட்டது.

ராம் மோகன ராவ்: வருமானவரி சோதனையின்போது என் வீட்டிலிருந்து 1 லட்சத்து 12 ஆயிரம் பணமும் ,சில தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டன.

வருமான வரித்துறை: சோதனையில் எல்லாம் கைப்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சேகர் ரெட்டியின் கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு என்பதில் ராமமோகன ராவ் அவரது மகன் விவேக் குறித்த விபரங்கள் மற்றும் அவரது பணம் இருக்கும் என்ற சந்தேகத்தி லேயே சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ராம் மோகன ராவ்: எனது மகன் அரசு டெண்டர் எடுத்திருந்தால் அதில் தவறு ஏதும் இல்லையே?

வருமானவரித்துறை: அரசு டெண்டர்கள் விதி மீறல்கள் முறைகேடான அனுமதி போன்றவை குறித்து முழு விசாரணை நடத்தப்படும், ராவின் மகன், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் , அங்கு அவருக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது அது பற்றி முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல உண்மைகள் வெளிவரும்.

– இவ்வாறு வருமானவரித்துறை விரிவாக பதில் அளித்துள்ளது.

மேலும், “ராவின் மகன் விவேக் விசாரணைக்கு ஆஜராகாமல்  இருக்கிறார், இது தொடர்ந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் வருமானவரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்