ராம்நகர் தொகுதி இடைத்தேர்தல்: அனிதா குமாரசாமிக்கு ஆதரவாக பாஜ வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார்

பெங்களூரு:

ர்நாடக மாநிலம் ராம்நகர் தொகுதி இடைத்தேர்தலில் மஜத சார்பில் முதல்வர் குமாரசாமியின் மனைவி  அனிதா குமாரசாமியை எதிர்த்து பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சந்திர சேகர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் மத சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஆட்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமாரசாமி தனது ராம்நகர் தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து, காலியாக உள்ள  சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுளுக்கும் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து உள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நாளை மறுதினம் (நவம்பர் 3ந்தேதி)  நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  ராம்நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவரை எதிர்த்து, பாஜக சார்பில் சந்திரசேகர் நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஆனால், தனக்காக பாஜக தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆதரிக்கவும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், ராம்நகர் தொகுதி பாரதியஜனதா கட்சி வேட்பாளர் சந்திரசேகர் இன்று முதல்வர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக வேட்பாளர் கட்சி தாவியதையடுத்து ராம்நகரில் போட்டியிடும் கர்நாடகா முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமியின் மனைவி அனிதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது.