பிலிப்பைன்ஸில் 2 இந்தியர்களுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கல்

மணிலா:

பிலிப்பைன்ஸில் 2 இந்தியர்களுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாக1957-ம் ஆண்டு முதல் ரமோன் மகசேசே விருது
ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக் உள்பட 6 பேர் மணிலாவில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த விருதை பெற்றனர்.

மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் அவரது மனைவியும் மனநலம் குன்றி மும்பை வீதிகளில் திரியும் நோயாளிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான இலவச உறவிடம், உணவு மற்றும் சிகிச்சை அளித்து பின்னர் குணமடைந்த பிறகு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் அரிய சேவையை செய்து வந்துள்ளனர். இதற்காக 1988-ம் ஆண்டில் சாரதா மறுவாழ்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பரத் வட்வானி ஆற்றிய தொண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சோனம் வாங்சுக், தனது 19-வது வயதில் பொறியியல் கல்வி பயின்றுவந்தபோது கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், படிப்பில் பின்தங்கிய நிலையில் அரசு தேர்வுகளில் வெற்றி பெறாமல் இருந்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார். 1988-ம் ஆண்டில் லடாக் மாணவர் கல்வி கலாச்சார கழகம் என்னும் அமைப்பை தொடங்கி பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவர் உழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹோவார்ட் டி, கம்போடியாவின் யோவ்க் சாங், கிழக்கு டைமூர் நாட்டை சேர்ந்த மரியா டி லூர்ட்ஸ் மார்ட்டின்ஸ், வியட்நாம் நாட்டை சேர்ந்த வோ தி ஹோவாங் என் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.