பார்சிலோனா:

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

நடால் இதுவரை 11 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியின்போது,  6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெப னோஸ் டிட்சிபாசை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆட்டம் சுமார் 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், பெல்ஜியத்தின் டேவிட்கோபினை  6-4, 6-0 என்ற நேர் செட்டில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  இறுதிப் போட்டியில் கிரேக்க நாட்டை சேர்ந்த 19வயது இளம் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசுடன் (63வது ரேங்க்) நேற்று மோதிய நடால், சிட்சிபாசின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார்.

முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற அவர், அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று பார்சிலோனா ஓபனில் 11வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

நடால் இதுவரை மொத்தம் 77 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் களிமன் தரையிலான போட்டிகளில் 401 முறை வெற்றியும்,  35 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.