ராகுல் காந்தியின் அணிக்கு புகழாரம் சூட்டும் ரம்யா

கேம்பிரிட்ஜ்

பாஜக அளவுக்கு சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு போதுமான அளவு வாய்ப்பு இல்லாத போதும் ராகுல் காந்தி அணி சிறப்பாக செயல்படுவதாக நடிகை ரம்யா என அழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

கர்னாடகாவை சேர்ந்த நடிகை ரம்யா என அழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர்.   இவர் கடந்த 2012 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியில் இணந்தார்.   2017ஆம் ஆண்டில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று மாண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.   அதன் பின் 2017 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார்.

தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவராக உள்ளார்.   இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் “சமூக வலைதளத்தில் இந்திய அரசியல்”  என்னும் கருத்தரங்கில் கலந்துக் கொண்டார்.   அப்போது ரம்யா, “தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளும் பாஜகவுக்கு சமூக வலை தளங்களிலும், செய்தி மிடியாக்களிலும் பெருமளவு வாய்ப்பு உள்ளது.   எங்களுக்கு அந்த அளவு இல்லை.    ஒரு குறுகிய வட்டத்தினுள் மட்டுமே நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது.

ஆனால் ராகுல் காந்தியின் அணி இந்த குறுகிய வட்டத்தினுள் இருந்துக் கொண்டே திறமையாக செயல்பட்டு வருகிறது.   உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ள எந்த ஒரு நிகழ்ச்சியையும், அல்லது பண்டிகைகளையும் மறக்காமல் மக்களுக்கு வாழ்த்து செய்திகளை இந்த அணி அனுப்புகிறது.    இது அந்தக் குழுவின் திறமைக்கு ஒரு சான்று”  எனக் கூறினார்.

அப்போது இடை மறித்து ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவது யார் என கேட்டதற்கு “ராகுல் காந்தியே பதிகிறார்”  என ரம்யா தெரிவித்தார்.