மெக்கா & மெதினா மசூதிகளில் பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகை!

ரியாத்: முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான மெக்கா & மெதினாவில், பொது பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகைக்கு செளதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அனுமதியளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், இந்த இடங்களில் ரமலான் தொழுகைகளுக்கு ஏராளமானோர் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பொது வழிபாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கியமாக, ஏராளமான வெளிநாட்டு முஸ்லீம்கள் கூடும் இடங்களான மெக்கா மற்றும் மெதினா மசூதிகளில் கூட்டு தொழுகைகள் தடைசெய்யப்பட்டன. இந்நிலையில், இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

எனவே, இதையொட்டி, வெளியிலிருந்து வரும் பங்கேற்பாளர்கள் யாருமில்லாமல், அந்த முக்கியமான இரண்டு இடங்களில் தொழுகைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த இரண்டு மசூதிகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான அப்துல் ரஹ்மான் அல் சுடைஸ் தெரிவித்தார்.

“இந்த முடிவானது, உலகளாவிய தொற்றுக்கு மத்தியலும், புனித இடங்களின் மாண்பைக் காப்பதில், காப்பாளர்களின் ஆர்வத்தைக் காட்டுவதாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செளதி அரேபியாவில், தற்போது நாடு தழுவிய ஊரடங்கு, நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.