உடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..

 

“பாகுபலி” படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணாவின் உடல் நிலை சரியாக இல்லை என அண்மையில் செய்தி பரவியது.

அவரது மனைவி மிகிகா பஜாஜ் வெளியிட்ட போட்டோ ஒன்றில், ராணா உடல் இளைத்து ஒல்லியாக காணப்பட்டார். இதனால் ராணா ரசிகர்கள் கவலை பட்ட போது “எனக்கு ஒன்றும் இல்லை. நான் நலமாக உள்ளேன்” என ட்விட்டரில் அவர் விளக்கம் அளித்தார்.

ராணாவுக்கு சிறுநீரக கோளாறு உள்ளதால் அவர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல விருக்கிறார் என்றும் செய்தி பரவியது. இந்நிலையில் தனக்கு உடல் நலம் சரி இல்லை என்பதை ராணா முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகை சமந்தா “சாம் ஜம்” என்ற நிகழ்ச்சியை டி.வியில். தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் ராணாவை பேட்டி கண்டார். அந்த பேட்டியில், “தனக்கு உடல் நலம் சரி இல்லை” என மனம் திறந்தார், ராணா.

“வாழ்க்கை சக்கரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தடைகள் வரும். எனக்கு பிறந்தது முதலே ரத்த அழுத்தம் (பி.பி) உள்ளது.

பி.பி.இருந்தால் இதய கோளாறு வரும் வாய்ப்பு உள்ளது. சிறுநீரக கோளாறும் வரலாம்” என அவர் குறிப்பிட்டார்.

“உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், 70 சதவீதம் பக்க வாதம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. 30 சதவீதம் மரணத்துக்கும் வாய்ப்பு உண்டு என டாக்டர்கள் என்னிடம் தெரிவித்தனர்” என ராணா கூறிய போது, அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணிர் கொட்டியதால், டி.வி. யூனிட் அதிர்ச்சியில் உறைந்தது. சமந்தா உள்ளிட்டோர் ராணாவை தேற்றினர்.

– பா. பாரதி