ராஞ்சி:

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

இதில் ஆஸ்திரேலியா  இரண்டு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் மேட்ச்சில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

அதைத்தொடர்ந்து 3வது டெஸ்ட் மேட்ச் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் 451 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து இந்தியா மட்டையை பிடித்தது.  நேற்று 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் சேர்ந்திருந்தது.

இன்று நான்காவது நாள் ஆட்டம்  தொடர்ந்தது. இந்திய அணி வீரர்களான  புஜாரா-சஹா இணை நிதானமாக,  சிறப்பாக விளையாடியது.

உணவு இடைவேளை வரையில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு இந்தியா 435 ரன்களை எடுத்து இருந்தது. அப்பொழுது புஜாரா 150 ரன்களை கடந்தும்,  விருத்திமான் சஹா 59 ரன்களுடனும் விளையாடி வந்தனர்.

அதன்பிறகும் இந்த ஜோடி அபாரமாக ஆடியது.  ஆட்டத்தின் 191.3 வது ஓவரில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து விருத்திமான் சஹாவும் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயோனின் பந்துவுக்கு மேக்ஸ்வெல்லிடம்  கேட்ச் கொடுத்தார் புஜாரா. 193.2வது ஓவரில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.  525 பந்தில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்த புஜாரா ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 3-வது இரட்டை சதம் இதுவாகும். மேலும் இந்த இன்னிங்ஸ் மூலம் டெஸ்ட் போட்டியில் 500-க்கும் அதிகமான பந்துகளை எதிர்க்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

 

புஜாராவைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்த விருத்திமான் சஹாவும் அவுட் ஆனார். 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். இவர்களில்  ஜடேஜா அதிரடியாக விளையாடினார். ஜடேஜா 46 ரன்கள் எடுத்திருக்கும்போது உமேஷ் யாதவ் அவுட் ஆனார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 201-ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் அடித்தார்.

அவர் 51 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்களை எடுத்தார். அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஓ கெபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலயா துவக்கியது.  துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும்  நாதன் லியான் இருவரும்  வந்த வேகத்தில்  ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்கள்.

ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.