ராணிப்பேட்டை

க்தரிடம் பண மோசடி செய்ததாக திருவலம் சாந்தா சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சாமியார்களிடம் ஏமாறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   பல படித்த மனிதர்களும் சாமியார்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து நிற்கும் செய்திகள் அடிக்கடி வெளிவந்தாலும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் உள்ளது.  தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருவலம் பகுதியில் சர்வ மங்களா பீட சாமியார் சாந்தா சாமி என்பவர் மீது பண மோசடி புகார் எழுந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே மாவட்டம் வாலாஜாபேட்டை பொதிகை நகரைச் சேர்ந்த 50 வயதான கேசவ மூர்த்தி என்பவர் ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளராகப் பணி புரிந்து வருபவர் ஆவார்.  அடிக்கடி திருவலம் சர்வமங்களா பீடத்துக்குச் சென்று வரும் இவருக்குப் பீடாதிபதி சாந்தகுமார் என்னும் சாந்தா சாமியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.   சாமியார் சொல்வதை முழுவதுமாக கேசவ மூர்த்தி நம்பி உள்ளார்.

சாந்தா சாமி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 வரை தொழில் முதலீடாக சிறிது சிறிதாக ரூ.45 லட்சம் பணம் வங்கி உள்ளார்.  லாபத்தில் பங்கு தருவதாகக் கூறிய சாமியார் எதுவும், தரவில்லை.  கடந்த ஆகஸ்ட் மாதம் சாமியார் வழங்கிய ரூ.50 லட்சத்துக்கான காசோலை கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ மூர்த்தி சாமியாரிடம் பணம் கேட்டுள்ளார்.

சாமியார் பணம் கொடுக்க மறுத்ததுடன் இங்கு மீண்டும் வந்தால் சூனியம் வைக்கப்படும் என மிரட்டி அனுப்பி உள்ளார்.  இதையொட்டி காவல்துறையில் புகார் அளித்ததால் சாமியார் கடந்த மாதம் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.  சாமியார் மீது மேலும் மேலும் புகார் வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின்  பேரில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இது ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.