குவகாத்தி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், பாரதீய ஜனதா சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறியுள்ளார் அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய்.

அவர் கூறியுள்ளதாவது, “அடுத்தாண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கான முதலமைச்சர் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்று எனக்கு தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அடுத்த முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன். ரஞ்சன் கோகோய், ஏற்கனவே ராஜ்ய சபா பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதால், முதலமைச்சர் பதவிப் போட்டியையும் அவர் ஏற்கலாம்.

இது அனைத்துமே அரசியல்தான். அயோத்தி வழக்கில், ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், பாரதீய ஜனதாவுக்கு பெரிய மகிழ்ச்சி. பின்னர் அவர் சிறிதுசிறிதாக அரசியலில் நுழைந்து ராஜ்ய சபா பதவியை ஏற்றுக்கொண்டார்.

அவர் நினைத்திருந்தால், மனித உரிமை கமிஷன் அல்லது வேறு கமிஷன்களுக்கு தலைவராகியிருக்கலாம். ஆனால், அவர் அரசியலை விரும்பிய காரணத்தாலேயே, ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டார்” என்றுள்ளார் தருண் கோகோய்.