மும்பை: மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்சின் டிசாலே என்ற 32 வயது ஆசிரியருக்கு, இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான உலகளாவிய விருது கிடைத்துள்ளது. அதேசமயம், அவர் தனக்கான பரிசுத் தொகையில் பாதியை, தன்னுடன் போட்டியிட்ட சக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருக்கான பரிசுத்தொகையாக 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.

சிறப்பு கோவிட் ஹீரோ பரிசை வென்றவர் ஜெமி ஃபிராஸ்ட் என்ற பிரிட்டன் நாட்டு ஆசிரியர். அவர், இலவச கணித டியூஷன் வெப்சட்டை நடத்தினார்.

இந்த ரஞ்சித்சின் டிசாலே, மராட்டிய மாநிலத்தின் பரைட்வாடி என்ற கிராமத்திலுள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணிகளிலிருந்து வரும் சிறுமிகளின் கல்வி முன்னேற்றத்தை, இவர் நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறார். அந்த மாணவிகள், இளம்வயது திருமணத்திலிருந்து தப்பித்து, நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு இவர் பேருதவி புரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகச்சிறந்த விதிவிலக்கான ஆசிரியர் என்ற பட்டம் இவருக்கு கிடைத்துள்ளது. இவருடன், இந்த கெளரவத்தைப் பெறுவதற்காக போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 12000 என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடன் போட்டியிட்டு, முதல் 10 இடங்களுக்குள் வந்தவர்களுடன், தனது பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரஞ்சித்சின் டிசாலே.

இவர், 83 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை நடத்துவதுடன், பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கிடையே, ஒரு சர்வதேச திட்ட கட்டமைப்பு தொடர்புகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.