சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கவுள்ளதையடுத்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 2020 – 21ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் உண்டு. பரிசீலனைக்குப் பின், தரவரிசை பட்டியல் www.tnhealth.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 6,455 பேர் தகுதிபெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை அரசு மருத்துவர்கள் பிடித்தனர். அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், 744 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்எஸ் படிப்பு தரவரிசை பட்டியலில், 2,689 பேர், தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 328 பேர் இடம்பிடித்துள்ளனர்.

வருகின்ற மே மாதம் 4ம் தேதிக்குள், மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, ஆன்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதால், பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கை, இந்த வார இறுதியில் நடத்தி முடிக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.