வாட்ஸ் ஆப்- பில் சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் லிங்க் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

வாட்ஸ் ஆப்பில் ‘I love the new colours for WhatsApp’ என்ற குறிப்புடன் லிங்க் ஒன்று வந்தால் கிளிக் செய்ய வேண்டாம். க்ளிக் செய்தால் வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்த ஒரு அப்ளிகேஷனை நிறுவச் சொல்லும்படி கேட்கும்.

அதற்கு முன்பாக, உங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய (வெரிஃபிகேஷன்) நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கும். . இதற்கு ஒப்புதல் அளித்தால், உங்களுக்கு வந்ததைப் போலவே உங்கள் நண்பருக்கும் செய்தி (மெசேஜ்) அனுப்பப்படும்.

அதற்குப் பிறகும், கம்ப்யூட்டருக்கான கூகுள் குரோமில் மட்டுமே வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்தலாம் என்று கூறி, BlackWhats என்ற குரோம் எக்ஸ்டென்ஷனை பதிவிறக்குமாறு கோரும்.  அதைப் பதிவிறக்கி கலர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்.

ஆனால், இது வாட்ஸ் ஆப்பின் அதிகாரப்பூர்வமான வெளியீடு அல்ல.  இதன் மூலம் பயன்படுத்துபவரிடம் உள்ள தகவல்கள் திருடப்படலாம். இதைத் தவிர்ப்பதும் எளிது. உங்களுக்கு வரும் லிங்க் சிரில்லிக் எனப்படும் ஆங்கிலத்தைப் போலவே இருக்கும் எழுத்துக்களில் இருக்கும். அதை சற்று கவனமாகப் பார்த்து தவிர்த்துவிடவும். இதுபோன்ற, லிங்க் மூலமாகவே ரான்சம்வேர் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.