பலாத்காரம் செய்வோரை நடுவீதியில் மக்கள் அடித்துக் கொல்ல வேண்டும் : மாநிலங்களவையில் ஜெயா பச்சன்

டில்லி

லாத்காரம் செய்யும் குற்றவாளிகளை நடுவீதியில் வைத்து மக்களடித்துக் கொல்ல வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் கூறி உள்ளார்

ஐதராபாத் நகரில் ஒரு 26 வயதான பெண் மருத்துவர் சுங்கச் சாவடி அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு பணிக்குச் சென்றுள்ளார்.  திரும்பி அவர் வரும்போது அவர் ஸ்கூட்டர் பஞ்சராகி இருந்தது.  அவருக்கு உதவுவதாகக் கூறிய நான்கு பேர அவரைக் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்துள்ளனர்.  இந்த வழக்கு தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ள இந்த வழக்கு குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது.

முன்னாள் பாலிவுட் நடிகையும் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் தற்போது மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் உறுப்பினராக உள்ளார்.   ஐதராபாத் நிகழ்வு பற்றி அவர், “இந்த நிகழ்வு குறித்து தற்போது        அரசு சரியான மற்றும் முடிவான பதிலை அளிக்க வேண்டும்.   உண்மையில் என்ன நடந்தது?  இது போல அக்கிரமம் செய்பவர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை வழங்க உள்ளது?

இந்த மருத்துவரின் பலாத்காரக் கொலைக்கு ஒரு தினம் முன்ப இதைப் போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.   அந்த பகுதிக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பது குறித்தும் அவரால் ஏன் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த நிகழ்வுகளைத் தடுக்க முடியவில்லை என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்.

இது போல் பாதுகாப்புப் பணியைச் சரிவரச் செய்யாமல் இருவரின் உயிர் போகக் காரணமான ஊழியர்களை  நாடறிய தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.   இத்தகைய  பலாத்காரக் குற்றம் புரிவோரை மக்கள் நடுவீதிக்கு இழுத்து வந்து அடித்துக் கொல்ல வேண்டும்” என ஆவேசத்துடன் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எமி யஜ்னிக் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் எனக் கூறினார்.  அதிமுக உறுப்பினரான விஜிலா சத்யநாத் இந்த குற்றவாளிகளை இந்த வருட இறுதிக்குள் தூக்கி இட வேண்டும் என கூறி உள்ளார்.   காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் இது போல் மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.  அப்போது அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்த தகவல் அனைவர் மனதையும் புண்ணாக்கி உள்ளது.  இந்த  குற்றத்தைச் செய்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடந்து வருகிறது.   மேலும் காவல்துறையைச் சேர்ந்த மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி