புளோரிடாவில் ஒரு அரிய, மூளையை அழிக்கும் அமீபா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புளோரிடா சுகாதாரத் துறை இம்மாத தொடக்கத்தில் Naegleria fowleri – நெக்லீரியா ஃபோலெரி  என்ற மூளையை அழிக்கக்கூடிய ஒரு செல் உயிரினமான அமீபா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அறிவித்துள்ளது. இது பொதுவாகவே மிகவும் ஆபத்தானது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார். 1962 முதல், இதுவரை, புளோரிடாவில் 37 அமீபா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இப்போதைய தொற்று ஹில்ஸ்போரோ கவுண்டியில் கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் சுகாதாரத் துறை மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற வெதுவெதுப்பான நன்னீரில் இந்த நெக்லீரியா ஃபோலெரி பொதுவாக காணப்படும். அந்த நன்னீர் நிலைகளில் நீந்தச் செல்லும் பொதுமக்கள் இந்த அமீபா தொற்றுக்கு ஆளாகும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. நீந்தும் போது  “அமீபா நாசி குழல் வழியாக நுழைகிறது. எனவே, மூக்கில் தண்ணீர் நுழையாமல் தவிர்ப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் இந்த மோசமான உடல்நல பாதிப்பைத் தடுக்க முடியும்” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதிக நீர் வெப்பநிலை நிலவும் காலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளில் உள்ள வெந்நீர் மற்றும் நன்னீர் நிலைகளைத் தவிர்க்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. சூடான நன்னீரில் நீந்தும்போது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். சைனஸ் போன்ற மூக்கடைப்பு பிரச்சனைகளின் போது உபயோகப்படுத்தும் மூக்கு சுத்தம் செய்யும் சாதனங்கள் மூலமும் அமீபா தொற்றுக்கு உள்ளாக நேரிடும் என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
“அவ்வகையான மூக்கு சுத்தப்படுத்தும் சாதனங்களுக்கு காய்ச்சி ஆற வைத்த, சுத்திகரிக்கப்பட்ட காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே பயன்படுத்துங்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், புளோரிடா மாகாண சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி, இதுவரை 143 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் மட்டுமே பிழைத்துள்ளனர்.
Credits: CNN
Author: Leah Asmelash