உராங் உட்டானுடன் நட்பு பாராட்டும் நீர் நாய்கள் : அபூர்வ புகைப்படங்கள்

டொமைன் டு காம்ப்ரோன், பெல்ஜியம்

பெல்ஜியத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை உராங் உட்டான் குரங்குகளுடன் நீர் நாய்கள் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள டொமைன் டு காம்ப்ரோன் நகரில் பைரி டால்ஸா என்னும் மிருகக் காட்சி சாலை அமைந்துள்ளது  இங்குள்ள மிருகங்களுக்குச் சுறுசுறுப்பு, விளையாட்டு, மன மகிழ்வு, உடற்பயிற்சி போன்றவற்றை அளிக்க ஒரு புது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி  நீர் நாய்கள் எனக் கூறப்படும் மிகச் சிறிய வகை விலங்குகள் இந்த மிருகக்காட்சி சாலையில் உராங் உட்டான் குரங்குகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நதிகளில் இறக்கி விடப்பட்டன.   இங்கு உராங் உட்டான் குரங்கு குடும்பம் ஒன்று உள்ளது.

அதில் 24 வயதான உஜ்ஜெயின் என்னும் தந்தை, 15 வயதான தாய், மற்றும் பெரானி என்னும் மூன்று வயது மகன் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆற்றில் இறக்கி விடப்பட்ட நீர் நாய்கள் அங்கிருந்த உராங் உட்டான் குடும்பத்தினருடன்  நண்பர்களாகி விளையாடத் தொடங்கி உள்ளன.   இது பலரையும் கவர்ந்துள்ளது.  இந்த இரு வகை விலங்குகளுக்கும் இங்குள்ள பயிற்சியாளர்கள் பல விளையாட்டுக்களை சொல்லிக் கொடுத்துள்ளனர்.

இங்கு வரும் மக்கள் இந்த அரிய காட்சியைக் கண்டு களித்துச் செல்கின்றனர்.