கன்னடத் திரையுலகின் பிரபலமான இயக்குநர் நந்தா கிஷோரின் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பொகரு’.

இதில் துருவா சார்ஜா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் வீடியோ பாடல் ஒன்று ஏப்ரல் 2-ம் தேதி அன்று யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் 4.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூபில் அதிக முறை பார்க்கப்பட்ட கன்னட பாடல் என்ற சாதனையைப் படைத்தது.

ராஷ்மிகாவை துருவா சார்ஜா துரத்தி, மிரட்டி எனப் பல விதங்களில் அச்சுறுத்தி தன்னைக் காதலிக்கும்படி சொல்வது போல பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

கத்தியில் மிரட்டுவது, பலவந்தமாகக் கட்டிப்பிடிப்பது, தூக்குவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, மின்சார ஷாக் வைத்துவிடுவதாக எல்லை மீறிய காட்சிகள் இடம்பிடித்துள்ளது

சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைக் கண்டித்து பலர் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். யூடியூபிலிருந்தும், படத்திலிருந்தும் இந்தப் பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.