டில்லி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி மாளிகையில் நடக்க இருந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று கடுமையாகப் பாதித்துள்ளது.   இந்தியாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று தெரிவித்தார்.  உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் தொற்றைத் தடுக்க கூட்டங்களில் கலந்துக் கொள்வதையும் ஒருவரை ஒருவர் தொடுவதையும் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளது.

வட இந்தியாவில்  ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.   இந்த பண்டிகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தடவி கொண்டாடப்ப்ப்டுவது வழக்கம்.    எனவே பண்டிகை கொண்டாட்டங்களில் ஒருவரை ஒருவர் தொட நேரிடும்.  இதனால் பிரதமர் மோடி தாம் எவ்வித கொண்டாட்டத்திலும் கலந்துக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று ஜனாதிபதி டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “உலகையே அச்சுறுத்தும் கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாம் உதவ வேண்டும்.  ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையில் இந்த வருடம் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெறாது” எனத் தெரிவித்துள்ளார்.