டெல்லி:

இன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்கம் உட்பட பல பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘தங்கத்திற்கு 3% வரி விதிக்கப்படும். அதே போல ரூ. 500க்கும் குறைவான செருப்புகளுக்கு 5%, அதற்கு மேலான விலையுள்ள செருப்புகளுக்கு 18% விதிக்கப்படும். பீடிகளுக்கு 28% வரியும் விதிக்கப்படும்.

தங்கம், வெள்ளி ஆகியவை 3% வரியை கொண்டிருந்தாலும் வைரம் 0.25% வரியை மட்டுமே கொண்டிருக்கும். குழு ஒருமனதோடு இந்த விகிதாச்சாரங்களை முடிவு செய்தாலும், மீதமுள்ள விஷயங்களை வரும் 11ம் தேதி கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

சூரிய ஒளி பலகைகள் மீது 5% வரி விதிக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட 18% வரி தவறானது என்று விளக்கம் தரப்பட்டது. பருத்தி ஜவுளிகளின் மீது 5% வரி என்பது வரவேற்கத்தக்கது என்று பருத்தி ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் உஜ்வல் லகோடி தெரிவித்துள்ளார்.