சென்னை,

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை  அதிரடியாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இதன்படி இதுவரை கிலோ 13.50 என்று வழங்கப்பட்டு வந்த சர்க்கரை இனி   கிலோ 25 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு வரும் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 2 கிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வெள்ளைநிற அட்டை உள்ளவர்களுக்கு நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 கிலோ வரை சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் சர்க்கரை  ஒரு கிலோ  13 ரூபாய் 50 காசு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு சர்க்கரை விலையை திடீரென்று கிலோவுக்கு 11 ரூபாய் 50 காசுகள் ஏற்றி நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.

இதகுறித்து  தமிழக அரசு, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2016-17ம் ஆண்டில் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் அளவு 33,636 மெட்ரிக் டன்னாக உயர்ந்த நிலையில், மத்திய அரசு 10,833 மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே வழங்கியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள சர்க்கரையை தமிழக அரசு வெளி சந்தையில் விலைக்கு வாங்கி விநியோகம் செய்து வருகிறது என்றும், இதற்கு தமிழக அரசு மாதம் 20 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்று வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 10,833 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மட்டும் மானியம் கிடைத்ததால் மாநில அரசுக்கு மாதம் 14 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மத்திய அரசு தரும் மானியம் மாதம் 20 கோடி ரூபாயில் இருந்து 3 கோடியே 45 லட்ச ரூபாயாக குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு இதனால் மாதம் 108 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றும் 33,636 மெட்ரிக் டன் சர்க்கரை விநியோகத்திற்கும் சேர்த்து தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 1,300  கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் நவம்பர் 1 முதல் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டும் கிலோ 13 ரூபாய் 50 காசுகள் விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு கிலோ 25 ரூபாய்க்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிச்சந்தையில் 45 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரையை வாங்கி, அதனை கிலோ 25 ரூபாய்க்கு ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்வதால் அரசுக்கு ஆண்டுக்கு 836 கோடியே 29 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.